செவ்வாய், 25 செப்டம்பர், 2012

புலம்பெயர் தேச தமிழ் தலைகளின் கபடத்தனம்


 மதிப்புக்குரிய தமிழ் மக்களே வணக்கம்
சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வந்த ஒரு செய்தியானது,எம்மை மேலும் மேலும் புலம்பெயர் உறவுகளின் மேலான நல்ல எண்ணத்தையும் தமிழ் புலம்பெயர் தலைவர்கள் மீதான நம்பிக்கையையும் தகர்த்து எறிவதாக உள்ளது. ராதிகா சிற்சபேசன் என்ற ஒரு தமிழ் பெண் கனேடிய பாராளுமன்றத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட விடயமானது தமிழ் மக்களான எமக்கு மிகுந்த நம்பிக்கையை தந்த போதிலும் அவர்கள் தலைமையில் எந்தவிதமான உதவிகளும் எமது ஈழ தமிழ் மக்களுக்கு செய்யப்படவில்லை என்பதினை துரதிஷ்டவசமாக எம்மால் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது

தமிழ் மக்கள் மீதான தலைமைத்துவம் என்பது இளம் தலைமுறையை ஒரு சரியான முறையில் வழி நடத்துவதுடன் தமது சுய நலனுக்காக அவர்களை பயன்படுத்தாத ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது உள்ள தலைமைத்துவமானது எமது இளம் தலைமுறையை தமது நலனுக்காக அதிகளவில் பயன்படுத்துகின்றார்களோ என்ற இயப்பாடானது எமக்குள் தோன்றியுள்ளது. கனடிய நாட்டில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் மார்க்கம் (ஸ்ரோஃப்வில்) நடத்தப்படும் 48 மணிநேர இசை நிகழ்ச்சியானது ஒரு பலத்த சந்தேகத்தை எம்முள் உருவாக்கி உள்ளது. எம் இளம் சமுதாயத்தால் திரட்டப்படும் நிதியானது இடதுசாரி கட்சியின் பணபெட்டியை நிரப்பி அங்கு உள்ள ஆட்சியாளர்களின் நிதி நெருக்கடியை குறைக்கும் முகமாக ஏற்படுத்தபட்ட ஒரு நிகழ்வாகவே எம்மால் பார்க்கப்பட கூடியதாக உள்ளது.இதன் மூலம் எம்மினம் புலம் பெயர் தேசத்தில் தம்மை ஒரு அந்தஸ்தில் நிலை நிறுத்த முனைவார்களே தவிர ஈழம் சம்பந்தமாக எந்தவிதமான கருத்தையும் பாராளுமன்றத்தில் நிலை நிறுத்த போவதில்லை. தேவை ஏற்படின் தமிழ் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தமது வார்த்தைகளால் ஈழம் பற்றி நெஞ்சம் உருகும் படி அறிக்கை விடுவார்கள். அது தவிர பேச வேண்டிய இடங்களில் மௌனமாக இருந்து விடுவார்கள் என்பது வரலாற்றை புரட்டி பார்த்தால் புரியும்.

நாம் சேவையாளர்களுக்கு எதிரானவர்களோ அல்லது சேவை மனப்பான்மை அல்லாதவர்களோ அல்ல. எமக்கான கேள்வி என்னவென்றால் எம் ஈழ திருநாட்டில் எமது ஈழ போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த ஆயிரம் ஆயிரம் போராளிகளும்,தாய்க்குலமும் விதவைகளும், குழந்தைகளும் ஒரு நேர உணவுக்காக வாடி கிடக்கும் போதும், சொல்லமுடியாத கொடுமைகளை அனுபவித்து கொண்டு வாழும் போதும் புலம் பெயர் தேசத்தில் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதியானது ஈழ மக்களுக்கு சென்றடையவில்லை என்பது மட்டுமே தான். அத்துடன் எமது வளர்ந்து வரும் இளம் தலைமுறையானது ஈழம் பற்றி மேலும் மேலும் ஆழமாக சிந்திக்கவும் செயற்படவும் இன்றைய தலைமைகள் வழிவகை செய்ய வேண்டும் என்பதுவும் தான்

நன்றி
நிலாகவி


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக