பதினெட்டு வயது காதல்
கீதாவிற்கும் குணாகரனுக்கும் ஒரே ஒரு பொண்ணு. அவள் தான் மதுமிதா. படிப்பில் சுட்டியான அவள் இலங்கையில் இருந்து உள்நாட்டு யுத்தம் காரணமாக புலர் பெயர் தேசமான பிரித்தானியாவில் வசிக்கிறாள். அவளுக்கு அவளது அம்மா அப்பா என்றால் உயிர். அவர்களும் அப்படிதான்.
அவர்களுக்கு அவள் மட்டும் தான் எல்லாமே, இலங்கையில் இருக்கும் போது ஓரளவு வசதியாக வாழ்ந்த அவர் இங்கு வந்ததும் அங்கு செய்த அளவிற்கு வேலை செய்ய முடியவில்லை, ஏனென்றால் சரியான குளிர் அடுத்த மிக முக்கியமான காரணம் மொழி. அவரால் அவரது வேலை இடத்தில் சமாளிக்க முடியுமே தவிர மிகவும் நேர்த்தியாக பேசமாட்டார். அதனால் ஒரு ஓட்டலில் பாத்திரம் தேய்ப்பவராக இருக்கின்றார்.
இன்னும் ஒரு மூன்று வருடம் தானே அதற்குள் மதுவிற்கு ஒரு பார்ட் டைம் வோர்காவது கிடைக்கும். அவள் மருத்துவராக வந்தால் அவரையும் மனைவியையும் நன்றாக வைத்திருப்பாள் என்பது அவருக்கு தெரியும். அவரும் அவரது மனைவியும் எவ்வளவு கஷ்ரப்பட்டு அவளை படிக்க வைக்கின்றோம் என்பதும் அவளுக்கு புரியும். எல்லோரும் நினைப்பது போல வெளிநாட்டு வாழ்க்கை அவ்வளவு இலகுவானதாக இல்லை. அவரும் அவரது மனைவியும் இருக்கும் இடத்தில் தமிழர்களை பார்ப்பதே அரிது. ஒரு சிறு உதவிக்கு கூட யாரும் கிடையாது. இன்பமோ துன்பமோ அவர்கள் மூவரும் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். எப்போதாவது லண்டனில் நடக்கும் அவரின் உறவுகளின் கொண்டாட்டங்களுக்கு மட்டும் அவரின் இடத்தில் இருந்து போய் வருவார்கள். அந்த நாட்கள் மட்டுமே அவரிற்கு மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது, அவரையும் லண்டன் வந்து தங்கும்படி அவரது தம்பி அழைத்திருந்தார். இப்போது உள்ள வேலை பிரச்சனை காரணமாக அவருக்கு அவரது இடத்தை விட்டு வேறு எங்கு செல்லவும் விருப்பமில்லை.இன்னும் ஒரு மூன்று நான்கு வருடத்தில் மது படிப்பை முடித்ததும் லண்டன் போய் அவரின் உறவுகளுடன் வாழ் வேண்டும் என்று எண்ணி கொண்டார் அவர்.
மாலை எட்டு மணியானதும் மதுமிதாவுக்கு பசி வயிற்றை கிள்ளியது. என்ன சமையல் என்று அறிவதற்காக சமையலறையை நோக்கி நடந்தாள் அவள்.
அவளது அம்மா சமைத்து வைத்திருந்த இடியப்ப கொத்துவின் வாசனை அவளின் மூக்கை துளைத்தது, ம்ம்ம்ம் அவளின் அம்மாவிற்கு நிகர் அவள் தான், சமையல் கலையில் என்னவோ நளபாகம் தான் முதன்மையாக கொண்டாடப்பட்டாலும், அவளின் வாக்கு எப்போதுமே அவளின் அம்மாவிற்கு தான். இரவு உணவை முடித்து கொண்ட அவள் நாளை இருக்கும் அவளது பயோலோஜி பரீட்சைக்கு தயாராக எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு அவளது அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டாள்..
இப்போது அவளது பாய் பிரண்டுடன் பேசுவதா வேண்டாமா என்ற குழப்பம் வந்தது அவளிற்கு. இப்போது அவனுக்கு போன் அடித்தால் அவன் தன்னை தூங்க விடமாட்டன் நாளை பரீட்சை ஒழுங்காக செய்யமுடியாது, நாளைக்கு பேசுவோம் என்று எண்ணிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் சாய்ந்தாள் அவள்.
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வந்த கீதாவிற்கு ரொம்பவும் பதட்டமாக இருந்தது. அதிகாலை வேளை வேலைக்கு சென்ற கணவர் இன்னமும் வரவில்லை,போன் எடுக்கலாம் என்றாலும் தனது அன்பு மகளின் தூக்கம் சில வேளையில் கெட கூடும். அவளின் அறைக்குள் தானே டெலிபோன் இருக்கின்றது . நாளைக்கு அவளுக்கு பரீட்சை வேறு,என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவளின் கணவனின் காரின் ஓசை மெதுவாக கேட்டது.
வீட்டுக்குள் வந்ததும், என்ன ரொம்ப வேலையா? என்று அன்புடன் கேட்டாள் அவரின் மனைவி.
"இப்போது ஹோட்டல் எல்லாம் சீசன் டைம் இல்லையா, அதனால் ரொம்ப பிஸி மா" என்றார் அவர்.
"சரி நீங்க கையை அலம்பி விட்டு வாங்க சாப்பிடலாம் "என்றாள் அவள்.
"இப்போதே நேரம் ஆகி விடாது நாளை மதுவை நீங்க தான் கொண்டு போய் ஸ்கூலில் விடவேண்டும்" என்றாள் அவள் .
அதிகாலை அவளது தாயாரின் குரலை கேட்டு கண்விழித்த மது காலை கடன்களை முடித்து கொண்டாள். சமையல் அறைக்குள் இருந்த அவளது அம்மாவிடம் லஞ்ச் பொக்சை வாங்கிகொண்டு அவளது புத்தக பையை எடுத்துகொண்டாள் .வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த அவளது அம்மாவை கட்டி அணைத்து விட்டு அவளது அப்பாவுடன் காரில் ஏறி அமர்ந்தாள். ஸ்கூல் வந்ததும் கையசைத்து வழியனுப்பி வைத்தாள் அவள் .
இன்று தான் மதுவிற்கு கடைசி பரீட்சை,கடவுளே நீதான் என் பொண்ணுக்கு பக்கத்தில் நின்று அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டிகொண்டார் குணாகரன்.அவளுக்கு இனிமேல் விடுமுறை தானே. அவளை அவளது சித்தப்பா வீட்டிற்கு ஒரு மாதம் அனுப்பி வைத்தாள் சந்தோசப்படுவாள், என்று நினைத்து அதற்கான அனுமதியை அவரது தம்பியிடம் கேட்டு கொண்டார் அவர். அவருக்கும் அவரது மனைவிக்கும் தனிமை ரொம்ப கொடுமையாக இருக்கும். அதற்காக அவரது மகளின் சந்தோசத்தை கெடுக்க அவரிற்கு விருப்பமில்லை.அவள் அவளது சித்தப்பா வீட்டில் அவரது பெண்களுடன் சேர்ந்து வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வரட்டும் என்று எண்ணிக்கொண்டார் அவர்.
பரீட்சை முடிந்து வந்ததும் மதுவிற்கு அவளது அப்பா சொன்னதை நம்பவே முடியவில்லை.
"அப்பா உண்மையாக நான் லண்டன் போகின்றேனா"? என்றால் அவள்
"ஆமம்மா! போய் ஒரு மாதம் ஜாலியா இருந்துவிட்டு வா" என்றார் அவர்
அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டு கிளம்பினாள் அவள்
புகையிரதம் வரை வந்து வழியனுப்பி வைத்த அவளது அம்மாவின் கண்ணீரை பார்த்து , "ஏன் அம்மா அழுகின்றீர்கள்? ஒரு மாதம் தானே! என் தொல்லை இல்லாமல் நின்மதியாய் இருங்கள் "என்று சொல்லி சிரித்தாள் அவள்
"போடி போக்கிரி! உனக்கு ரொம்ப குறும்பு தான்" என்று செல்லமாக கடிந்து கொண்டாள் அவளது அம்மா.
மது வீட்டை விட்டு போனதும் வீடு ஒரே அமைதியாக இருந்தது. கீதாவிற்கு அவளின் அருமை மகளை பார்க்காமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருந்தது. நான்கு நாட்கள் கழித்து மதுவிற்கு போன் எடுத்தார் அவளது அம்மா. எதிர்முனையில் அவரது சகோதரிதான் பேசினார். அவர் சொன்ன செய்தியை கேட்டதும் அவரிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதை எப்படி அவரின் கணவருக்கு தெரிவிப்பது என்று ஒரே குழப்பமாக இருந்தது.
என் மகள் காதலிக்கின்றாளா? அதுவும் எதுவுமே படிக்காமல் காதிலே தோடும் கையிலே பியர் கானும், எந்த நேரமும் போதையில் இருக்கும் ஒருவனை, அவரால் நம்பவே முடியவில்லை.
எப்போதோ அவரது நண்பி சொன்ன செய்தி அவரின் காதுக்குள் ஒலித்தது."அக்கா இந்த ரோட்டில நிற்கின்ற ரவுடிகள் சிலர் இந்த பேஷ் புக்கிலும் , சாட்டிங்கிலும் உள்ள அழகான சின்ன பெண்ணுங்களை தங்களின் பேச்சு திறமையால் மடக்கி கூட்டிக்கொண்டு போய் திருமணம் செய்து தாங்கள் இந்த நாட்டு நிரந்தர வதிவுடமை எடுக்கின்றார்கள்" என்று அப்படிபட்ட ஒருத்தன் என் மகளையும் எமாத்துகின்றானா? இல்லை என் மகள் அப்படி இல்லை. இவர்கள் வேண்டும் என்றே சொல்லுகின்றார்கள் இப்போதே அவளை போய் கூட்டி கொண்டு வர வேண்டும். என்று எண்ணி விட்டு அவரது கணவனுக்கு போன் செய்து விஷயத்தை மெதுவாக கூறினார் அவர்.
மாலை நேரம் விடுப்பு எடுத்துகொண்டு குணாகரனும், கீதாவும் லண்டனிற்கு பயணமானார்கள்.அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து லண்டன் இருநூற்றி முப்பது மைல் தொலைவில் உள்ளது. எப்படியும் ஒரு மூன்று மணித்தியால கார் ஓட்டம் தான். குணாகரனுக்கு அவரது மனைவி சொன்னதை நம்பவே முடியாமல் இருந்தது.என் மகளா இப்படி ! என்ற கேள்வி திரும்ப திரும்ப அவரிடம் எழுந்தது.இப்படி நம்ப வைத்து ஏமாற்றி விட்டாளே என்ற கோபமும் வந்தது.
குணாகரன் தம்பியின் வீட்டை வந்து அடைந்ததும் அவரது கோபம் உச்சக்கட்டத்தை அடைந்து இருந்தது.
"ஏய் மது இங்கே வா" என்றார் அவர்.
"என்னப்பா"என்றாள் மது.
"நீ யாரையாவது காதலிக்கின்றாயா ?"என்று கேட்டார் அவர்.
"ஆமாம்" என்றாள் அவள்.
"யாரவன்?" என்று கேட்டார் குணாகரன்.
"அவன் என்று சொல்ல வேண்டாம், அவரின் பெயர் மன்மதன் நாங்கள் இருவரும் ஒரு வருடமாக காதலிக்கின்றோம்" என்றாள் மது.
"என்ன சொல்கின்றாய் மது?, ஒரு வருடமா! அந்த பொறுக்கி ராஸ்கல் என்ன செய்கின்றான்" அவர்.
மதுவுக்கு கோபம் வந்தது.
"அப்பா மன்மதனை மரியாதையாக பேசுங்கள். அவருக்கு இப்போது ஒரு வேலையும் இல்லை. அவர் எங்கு வேலைக்கு சென்றாலும், அங்கு நடக்கும் கொடுமையை தட்டி கேட்பதால், வேலையில் இருந்து தூக்கி விடுகின்றார்களாம்" என்றாள் அவள்.
'ஏய்! கண்ட கண்ட சினிமா படத்தை பார்த்து விட்டு,அவனை ஹீரோ மாதிரி நினைத்து நீ லவ் பண்ண தொடங்கி விட்டாயா? சீ நாயே! இதற்கு தானா உன்னை வளர்த்தேன்?" என்று கோபமாக திட்டினார் கருணாகரன்
மதுவிற்கு அவமானம் தாங்க முடியவில்லை. அவளின் சித்தப்பா பொண்ணுகள் முன்னிலையில் அவளது அப்பா இப்படி தர குறைவாய் பேசுவார் ,என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
"அப்பா இனி ஒரு வார்த்தை தப்பாக பேசினால், நான் போலீசுக்கு போன் பண்ணுவேன், நீங்க எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு இது என்ன உங்கள் நாடா?" என்றாள் அவள்.
"என்னடி பண்ணுவாய்? போலீசுக்கா போன் போடுவாய்? போடடி போடு!" என்று ஆவேசமாய் கத்தியபடி மதுவின் கன்னத்தில் அறைந்தார் அவளது அப்பா.
மதுவிற்கு கோபத்தை அடக்க முடியவில்லை உடனடியாக போலீசுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறினாள் அவள். உடனடியாக குணாகரனை அரெஸ்ட் செய்தார்கள் போலீசார்.
மெல்லிய குழந்தையின் அழுகை ஒலியில் இருந்து சுயநினைவுக்கு திரும்பினாள் மதுமிதா. அவளது செல்ல மகன் பசித்து அழுது கொண்டு இருந்தான். அவளின் குழந்தைக்கு இப்போது பத்து மாதம் ஆகின்றது. அவனிற்கு புட்டி பாலை கரைத்து கொடுத்து உறங்க வைத்தவளிற்கு தூக்கம் வர மறுத்தது.
எல்லாமே இப்போது தான் நடந்தது போல இருந்தது அவளிற்கு. அவளது தந்தையை அரெஸ்ட் பண்ணிய போலீசார் கோட்டில் ஆஜார்படுத்தியதும் அவள் தனது அப்பா அம்மாவுடன் போக மாட்டேன், என்று சொல்லி அவளது காதலன் மன்மதனுடன் சென்றதும் படம் போலே அவளின் மனதில் ஓடியது.திருமணமான முதல் ஒரு வாரம் வரையும் நல்லவன் போல இருந்தான் அவன்.
அவள் பிரிந்து வந்ததை தாங்க முடியாத அவளது அப்பாவிற்கு முதல் ஹாட் அட்டாக் வந்து இறந்து போனதும் ,தந்தையின் இழப்பை தாங்காத தாய் நினைவிழந்து நடை பிணமாய் வாழ்வதையும், அறிந்த அவளால் நின்மதியாக மன்மதனுடன் வாழ முடியாது போய் விட்டது. மன்மதனுக்கு வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை, என்பதை அவனுடன் வாழ வந்த இரண்டு மாதங்களில் புரிந்து கொண்டாள் மதுமிதா. இந்த நிலையில் தன்னுடைய படிப்பை தொடரமுடியாத அவள் ஏதாவது ஒரு வேலைக்கு செல்வதற்கு முடிவு எடுத்தாள். அவள் வேலைக்கு சென்று கொண்டுவரும் காசில் மூக்கு முட்ட குடித்துவிட்டு வீட்டில் படுத்து இருப்பதுதான் அவளது கணவனின் வேலை.
அவளது அப்பா அம்மாவை மீறி தான் திருமணம் செய்தது எவ்வளவு பிழை என்பதை அவனுடன் வாழ வந்து மூன்று மாதங்களில் உணர்ந்து கொண்டாள் அவள்.ஆனாலும் அவனுடன் மட்டும் தான் வாழவேண்டும் என்று எண்ணி கொண்டாள் அவள். மிக சிறுவயதிலேயே குடி பழக்கத்திற்கும் ,போதை பழக்கத்திற்கும் அடிமையாகிய அவளது கணவன் நீண்ட காலம் உயிர் வாழ மாட்டான் என்று வைத்தியர்கள் எச்சரித்தனர். அவளும் எவ்வளவு முயற்சி எடுத்தும் அவனை குடி பழக்கத்தில் இருந்து மீட்க முடியவில்லை ஏன் காலனிடம் இருந்தும் தான் . ஆம் மன்மதன் இறந்து நான்கு மாதங்கள் ஆகின்றது .
தொடர்ந்து வந்த இருமல் சத்தத்தில் அவளது என்ன உணர்வில் இருந்து விழித்து கொண்டாள் மதுமிதா. பக்கத்து அறையில் படுத்து உறங்கி கொண்டு இருந்த அவளின் அம்மாவுக்கு மாத்திரை கொடுக்கும் நேரம் என்பதை அறிந்த அவள் தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறையை நோக்கி நடந்தாள் அவள்.அவளுக்கு இப்போது இருபத்தியொரு வயதுதான் ஆகின்றது. அதற்குள் ஒரு குழந்தையும், உடம்பு முடியாத தாயும் அவளது கையில். அவளின் வயது கோளாறால் ஏற்பட்ட ஒரு காதல் எப்படி தன் வாழ்கையை சிதைத்து விட்டது என்று எண்ணி பெருமூச்சு விட்டு கொண்டாள் மதுமிதா......
நிஜ வாழ்க்கையிலும் இக் கதையில் வரும் நிகழ்வுகளை கண்கூடாக பாரக்கிறோம்.காதல் மயக்கத்தில் பெற்றோர் கூட எதிரியாகி விடுகின்றனர்.பின்பு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்கின்ற கதையாகி விடுகிறது, இவ்வாறே நல்ல கருத்துக்களையும் முன்வைத்து கதைகளை எழுத வேண்டும் என்பதே என் ஆசையுமாகும்.
பதிலளிநீக்கு