வெள்ளி, 6 ஜூலை, 2012

காதலே நீ என் காதலே

காலையில் இருந்தே மனசு அலைபாய்ந்து கொண்டு இருந்தது ஆஷாவிற்கு . இன்றாவது அவளது கணவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருமா? என்று ஒரே ஏக்கமாக இருந்தது.கடந்த ஒரு வாரமாக அவனது தொலைபேசி அழைப்பு வராதது ஒரு ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது . அவளது கணவன் எப்போதுமே அவளுக்கு தொலைபேசி எடுக்காமல் இருப்பதே இல்லை. ஒவ்வொருநாளும் ஒரு இரண்டு நிமிடமாவது அவளுடன் பேசுவான். இப்போது மெளனமாக இருப்பது அவளிற்கு ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியது .


ஆஷாவிற்கு  திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகி விட்டிருந்தது. அவளது குடும்பத்தில் உள்ள வறுமையின் காரணமாக மத்திய கிழக்கு  நாடான குவைத்தில்  வேலை பார்க்கும் ஒரு மாப்பிளையை பேசி திருமணம் முடித்து வைத்தார் அவளது அப்பா. அவனும் மிகவும் நல்லவனாகவே இருந்தான். திருமணமான மூன்று மாதங்களில் அவன் மீண்டும் குவைத்துக்கு சென்று விட, அவள் அவனது தாயாரின் வீட்டில் வசித்து வந்தாள். அவளது மாமியாரும் அவளுடன் மிகவும் அன்பாகவே இருந்தார். "எல்லோரும் நல்லவர்களாக இருப்பது, ஆஷா முற்பிறப்பில் செய்த புண்ணியம் தான்" என்று அவளது அப்பா அடிக்கடி சொல்லி கொள்வார்.

இவ்வாறே காலம் உருண்டோட அவளும் ஒரு குழந்தைக்கு தாயானாள். அவளிற்கு குழந்தை கிடைத்த போது அவளது கணவன் ஊரிற்கு வந்து மூன்று மாதங்கள் அவளுடன் தங்கி இருந்தான். அந்த மூன்று மாதத்தில் அவன் அவளின் மேல் பொழிந்த காதலை இப்போது நினைக்கும் போதும் அவளின் கண்களின் இருந்து கண்ணீர் வந்தது . இப்படி பட்ட கணவன் இப்போது தொலைபேசி எடுக்காமல் இருப்பது .அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது அவளுக்கு தெரிய அவனிற்கு யாரும் நண்பர்களும் இல்லை இருந்தால் அவர்களிடமாவது கால் பண்ணி கேட்கலாம் என்ன செய்வது புரியவில்லை அவளுக்கு ...
ஒருவேளை  ஏதும் நடந்து விட்டதா அவளது கணவனுக்கு? எதுவுமே புரியவில்லை அவளுக்கு ........

'ரீங் ரீங்' தொலைபேசி அழைப்பு கேட்டதும் சிந்தனையில் இருந்து விழித்து கொண்ட ஆஷா மிக வேகமாக சென்று அதை எடுத்தாள் அவள் அவர்கள் சொன்ன விடையத்தை கேட்டதும் அவளால் எதையுமே யோசிக்க முடியவில்லை.

குவைத்தின் மிகவும் வெப்பமான ஒரு பிரதேசத்தில் அவளது கணவன்  வேலை செய்யும் போது, தலையை சுற்றி மயக்கம் வந்ததாகவும், அந்த நேரத்தில் அவனுக்கு இரத்தத்தில் அதி உயர் அழுத்த நிலை ஏற்பட்டதாகவும், அந்நிலையில் இருந்த அவன் யாராலும் கவனிக்கபடாத இடத்தில் இருந்ததால், மரணம் அடைந்து விட்டதாகவும் கூறினார்கள். அத்துடன் அவன் வேலை செய்த கால வரையறை முடிந்த பின்னரும் அந்த நாட்டில் தங்கி இருந்ததாலும், அவனை பற்றிய விடயங்களை உடனடியாக திரட்ட முடியாத காரணத்தாலும் அவனை அங்கேயே அடக்கம் பண்ணி விட்டதாக சொன்னார்கள் .

 அவளது கணவன் வெளிநாட்டில் மிகவும் பாதுகாப்பாகவும் நன்றாக சம்பாதிப்பதாகவும், நல்ல வசதியாகவும்  வாழ்ந்து கொண்டு இருப்பதாக அவள் நினைத்துகொண்டு இருக்கும் போது யாராலும் கவனிக்கப்படாமல் ஒரு அகதியை  போல
அவளது கணவன் மரணத்தை தழுவி கொண்டதை நினைக்கும் போது அவளால் அவளை கட்டு படுத்த முடியவில்லை .

அவள் விம்மி விம்மி அழ தொடங்கினாள் அவளது அழுகை சத்தம் கேட்ட அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.
 "எதற்காக இப்படி அழுகின்றாய்"? என்று கேட்டாள் அவளது மாமியார்.
அவள் சொன்னதை கேட்டதும் அவளின் மாமியாரின் இதயமே நின்று விடும்போல இருந்தது .
என்மகனா! ஐயோ அவனை இனிமேல் பார்க்க முடியாதா? என்னையும், உன் மனைவியையும் மகளையும் ஏமாற்றி விட்டு போய் விட்டாயா?
எப்படி இந்த இரு சின்ன பெண்களையும் வைத்து கொண்டு நான் வாழுவேன்? என்று பெரும் குரல் எடுத்து அழ தொடங்கினார் அவர்.

"சரி நடந்தது நடந்து போச்சு, இனி ஆக வேண்டியதை பாருங்கள் .எங்களால் முடிந்த உதவியை செய்கின்றோம்" என்றார் அவளின் வீட்டிற்கு துக்கம் கேட்க வந்த ஊர்த்தலைவர். எல்லா காரியங்களும் முடிந்து காலமும் உருண்டு ஓடியது.

ஆஷாவின் கணவன் இறந்து இன்றுடன்  ஐந்து வருடங்கள் முடிந்து விட்டு இருந்தது. இந்த இடைபட்ட காலப்பகுதியில் அவளும் ஒரு தொழில் பயிற்சி பெற்று இருந்தாள். அவளை எப்போதுமே அவளது மாமியார் சுருண்டு ஒரு மூலையில் இருக்க விடுவதில்லை. இப்போது அவள் அவளது கிராமத்திலேயே இருக்கும் ஒரு பாடசாலையில் கல்வி கற்பித்து வருகின்றாள். அவளிற்கு எப்போதும் அவளது மாமியாரில் அளவு கடந்த பாசமும் மரியாதையும் இருந்தது . அவர் மட்டும் இல்லை என்றால் அவளால் இந்த சமூகத்தில் ஒரு நல்ல இடத்தில் அமர முடியாது போய் இருக்கும் .

லட்சுமி அம்மாவிற்கு ஒருபோதும்  இல்லாதவாறு மிகவும் களைப்பாகவும் தலை பாரமாகவும் இருந்தது . இன்று மாலை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சென்று வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். அத்துடன் ஆஷாவை பற்றி நினைக்கும் போது அவரால் எந்த முடிவையும்  எடுக்க முடியாது இருந்தது . ஆஷாவின் பதின் எட்டு வயதிலேயே அவளுக்கு  திருமணமாகி இருந்தது அவளின் அழகையும் குணத்தையும் பார்த்து அவளை தன் மருமகளாக்க எண்ணி கொண்டவர் அவர். அவளும் மிகவும் நல்ல பெண்ணாகவே இருந்தாள். ஆனால் விதியின் பலனால் அவள் வாழ்விழந்து நிற்பது கொடுமை தான் என்று எண்ணிகொண்ட அவருக்கு, அவரின் பின்னர் அவளிற்கு யாருமே துணையில்லை என்பதும் மிகவும் தெளிவாகவே புரிந்தது.

திடீரென ஒரு எண்ணம் அவரது மனதில் தோன்றியது. ஏன் ஆஷாவிற்கு இன்னும் ஒரு திருமணம் செய்யக் கூடாது என்று எண்ணிக்கொண்டார் அவர். அவள் இப்போதும் பார்பதற்கு அழகாகவும் நல்ல குணவதியாகவுமே இருக்கின்றாள். அவளை மீண்டும் திருமணம் செய்பவன் கொடுத்து வைத்தவன் தான் என்று எண்ணி கொண்டார் அவர். ஆனால் இதற்கு எப்படியாவது பேசி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டார்  .

மாலை வீட்டுக்கு வந்த ஆஷாவிற்கு தனது மாமியார் எதோ தன்னிடம்  சொல்ல வருவதும் அதை சொல்ல முடியாமல் தவிர்ப்பது தெளிவாகவே புரிந்தது எப்போதுமே தான் சொல்லவேண்டியதையும்  செய்யவேண்டியதையும் மிகவும் சரியாகவும் தெளிவாகவும் செய்யும் மாமியாரின்  இந்த குழப்பம் அவளுக்கு புதிதாகவும் அதிசயமாகவும் இருந்தது .

எது என்றாலும் அவர் அவளுடன் பகிர்ந்து கொள்வார் என்பது அவளுக்கு தெரியும். அவரை அவள் தன் தாயை போலவே மதிக்கின்றாள். அவர் என்ன சொன்னாலும் அது அவளின் நன்மைக்காக மட்டும் தான் என்பதில் அவளுக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை.

"என்ன அம்மா ஒரே குழப்பமாக இருக்கின்றீர்கள்?" என்று கேட்டாள் ஆஷா .
"அம்மம்மா, நான் ஒரு விடயம் உன்னிடம் சொன்னால் தப்பாக எடுக்க மாட்டாயா"? என்றாள் லட்சுமி.
"இல்லம்மா சொல்லுங்க" என்றாள் ஆஷா
"உனக்கு இன்னும் ஒரு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கின்றேன் அம்மா .. எனக்கு ஏதாவது நடந்தால் உன்னையும் உன் சின்ன மகளையும் கவனிக்க யாரும்  இல்லை. அதை நினைக்கும் போது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது . தப்பாக நினைக்காதே உனக்கு இன்னும் ஒரு திருமணம் செய்து தருவது தான் எனக்கு நின்மதியை தரும்" என்றாள் அவள்
அதை கேட்ட ஆஷா "அம்மா நீங்கள்  என்ன செய்தாலும்  சரிதான் . நான் இப்படி ஒரு நல்ல வாழ்வு வாழ்வதே, உங்களால் தானே அம்மா . உங்கள் மனதில் எது சரி என்று பட்டாலும் செய்யுங்கள்" என்றாள் அவள்

அடுத்தநாள் காலையிலேயே தன் மருமகளுக்கு மறுமணம் செய்ய விரும்புவதாகவும், விருப்பமானவர்கள் தன்னிடம் தொடர்பு கொள்ளும் படியும் ஊர் பஞ்சாயத்தில் தெரிவித்தார் அவர்.

எப்போதுமே எதையோ பறிகொடுத்த மாதிரி தோன்றும் கெளதமின் முகத்தில் இருந்த ஆனந்தத்தின் காரணத்தை அறிய முடியவில்லை அவனது நண்பர்களால் .
"என்னடா இன்று ரொம்ப குசியா இருக்கின்றாய்?"  என்று கேட்டான் மேனன்.
"இல்லைடா! இன்று நான் ஆஷாவின் மாமியிடம் போய் நான் அவளை திருமணம் செய்ய விரும்புவதாக சொல்ல போகின்றேன்" என்று சொன்னான் அவன் .
"இல்லடா ஆஷா உன்னை திருமணம் செய்ய ஒருபோதும் சம்மதிக்க மாட்டாள்" என்று சொன்னான் மேனன் .
"இல்லைடா அவள் நிச்சயம் சம்மதிப்பாள்" என்றான் கெளதம்.
"ம்ம் ஒகே போய் கேட்டு பார்" என்றான் அவன்.

கெளதமிற்கு ஆஷாவை கடந்த பத்து வருடங்களாக தெரியும். அவளின் பதின்னைந்தாவது வயதில் இருந்தே  இருவரும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக காதலித்து இருந்தார்கள். ஆஷா மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்ததால் அவனின் குடும்பத்தாருக்கு அவனின் காதலை ஏற்க முடியாது இருந்தது. அவனின் பதின் எட்டாவது வயதில் அவனை அமெரிக்காவிற்கு சென்று படிக்கும் படியும் அவன் படித்து முடித்து வந்ததும் ஆஷாவை திருமணம் செய்து தருவதாகவும் ஏமாற்றி அவனை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார் அவனது தந்தை. தான் பட்ட படிப்பு முடித்து வந்தவுடன் உன்னை திருமணம் செய்வேன் அதுவரையும் காத்திருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கி கொண்டு அவன் சென்று விட அவனது தந்தை ஆஷாவின் தந்தையின் பலவீனத்தை பயன்படுத்தி அவளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்.

எண்ணற்ற கனவுடன் அமெரிக்காவில் இருந்து வந்த கெளதமிற்கு அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சி காத்து இருந்தது . ஆஷா இன்னொருவருடன் மணமாகி விதவையாக இருந்ததும் , தான் அனுப்பிய கடிதங்கள் எல்லாமே தன் தந்தையின் அடியாட்களால் கைப்பற்றபட்டு இருந்ததும் தாங்க முடியாத தந்தையின் துரோகமாக தெரிந்தது அவனுக்கு . நீங்கள் செய்த தீமைகள் எல்லாவற்றுக்கும் ஆஷாவிற்கு மறுவாழ்வு கொடுத்து சீர் செய்யப் போவதாக  அவன் அன்றே அவனது தந்தையிடம் தெரிவித்து இருந்தான்.

மூன்று வருடங்களுக்கு முன்னரே அவனது விருப்பத்தை ஆஷாவிடம் தெரிவித்த போது உன்னை ஒரு போதும் நான் மறுமணம் செய்ய மாட்டேன் என்று அவள் சபதம் இட்டு இருந்தாள் அவள்...

அன்று காணமல் போன அவனின் ஆனந்தம் இன்று திரும்பவும் அவனில் ஏற்பட்டது . ஆஷா அவளின் மாமியாரின் சொல்லை ஒருபோதும் தட்ட மாட்டாள் என்பது அவனுக்கு தெரியும். இப்போது  அவன் நேரடியாக ஆஷாவின் மாமியாரிடம் அவனது காதலை சொல்ல போகின்றான்  அதன் பின்னர் ஆஷா ......அவனது உயிர் மனைவி ,,,, பின்னர் ம்ம்ம்

அவனுக்கும் ஆஷாவிற்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டதான ஒரு பிரமையில் அவளின் வீட்டை நோக்கி சென்றான் அவன் .  .








1 கருத்து:

  1. அவள் சபதமிட்டது தன் கணவன் மேலுள்ள காதலினால். மறுமணத்திற்கு சம்மதித்தது மாமியாரின் மேல் உள்ள மதிப்பினால். ஆனால் அவளின் உண்மையான உணர்வுகள் அவள் மறுமணத்திற்கு பிறகுதான் வாழும். அவளது உணர்வுகளை முன்னமே வெளிபடுத்தியிருந்தால் திருமணமும் , இந்த துக்கமும் அவளுக்கு கிடைத்திருக்காது மகிழ்ச்சியாக கதையை நிறைவு செய்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு