சனி, 28 ஜூலை, 2012

பிச்சைகாரர் யாரடா?


நிமிட கதை 
சரியாக மதியம் பன்னிரண்டு மணி. மதிய சூரியன் தன் கோபத்தை எல்லாம் பூமி மீது காட்டியது ,அந்த உஷ்ண வெப்பத்தில் தெரிந்தது.
நகரத்தின் மைய பகுதியில் ஜன நடமாட்டம் நிறைந்த ஒரு இடத்தில் நின்றுகொண்டிருந்தான் பன்னிரண்டு வயது மதிக்கதக்க  ஒரு சிறுவன். அவனது கண்கள் அந்த வீதியால் நடந்து கொண்டு  இருப்பவர்களையும்,காரில் செல்பவர்களையும்,இரு சக்கர வண்டியில் செல்பவர்களையும் விடாது நோட்டம் விட்டு கொண்டு இருந்தது. சாலையோர சிக்னல் சிவப்பு நிறமாக மாறும் போது வீதியின்  நடுவே சென்று தன் கரத்தை ஏந்தி பிச்சை எடுத்து கொண்டு இருந்தான் அவன்.


சுட்டெரிக்கும் வெயிலில் தனது  காலில் எந்த பாதணியையும்  அணியாது தன் வயிற்றுக்காக பிச்சை எடுக்கும் அந்த சிறுவனை பார்த்தும் பார்க்காதவர்கள் போல மிக வேகமாக நடந்துகொண்டு இருக்கும்  அந்த மனிதர்கள் மத்தியில், தனது கையில் இருந்த கைதடியை ஊன்றியபடி மிகவும் வேகமாக அவனருகில் வந்தார் தனஞ்சயன். அவர் பெயரில் மட்டும் தான் தனம் இருந்ததே தவிர அவரும் தனது வயிற்று பிழைப்புக்காக வீதி ஓரத்தில் பிச்சை எடுத்து பிழைக்கும் ஒரு பிச்சைகாரர்தான்.


அந்த சிறுவனை பார்த்தவருக்கு அவனை பற்றி ஒரு சிறு கணிப்புக்கு வர முடிந்தது. அவனுக்கு இந்த தொழில் மிகவும் புதியது என்று புரிந்தது.அத்துடன் அவனது வயதுக்குரிய துடியாட்டமோ. குறும்போ இல்லாமல் கண்ணில் ஒரு விதமான ஏக்கத்துடன் வீதியில் நடந்து செல்லும் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்து "ஐயா, அம்மா" "பிச்சை போடுங்கம்மா" , "ரொம்ப பசிக்குதம்மா, ஐயா" என்று இடைவிடாது கேட்டு கொண்டு இருந்தான்.அந்த வார்த்தையை யாருமே சட்டை செய்யாமல் தம் கருமமே கண்ணாக வேகமாகநடந்துகொண்டிருந்தார்கள்.


மிகவும் அருகில் வந்த தனஞ்சயன் "ஏப்பா தம்பி இந்த பக்கம் வா"என்றார்.
அவனது முகத்தில் ஒருவித மிரட்சி தெரிந்தது.  ஒரு சிறு துணிவை வரவழைத்து கொண்டு "ஏன் அண்ணே என்னை வரச்சொல்லுகின்றாய்,? என்னை கடத்தி கொண்டு போய் கையை காலை வெட்டி பிச்சை எடுக்க வைக்க போகின்றாயா?, இன்று காலையில் கூட என் அம்மா சொல்லுச்சு ரோட்டில யாரும் கூப்பிட்டா போக வேண்டாம் ஏன்னு, உண்மையை சொல்லுண்ணே" என்றான் அந்த சிறுவன்  .


அட இது என்ன வம்படா? "அப்படி இல்லைடா தம்பி, நீ உன்னுடைய காலில் ஒரு பாதணியும் அணியவில்லை.,அந்த ரோட்டுக்கு பக்கத்திலை ஒரு பாதணி இருக்கு,அது யாருடையது என்று தெரியாது, எனக்கு தான் அதை அணிய முடியாது , நீயாவது எடுத்துப் போடு" என்றார் அவர்.
"ஓ அப்படியா அண்ணே! இதோ வருகின்றேன்." என்று சொன்ன அவன்,  அவர் கை காட்டிய திசையை நோக்கி நடக்க தொடங்கினான் .


காலையில் இருந்து அவன் பார்த்த மனிதர்களுக்கு நடுவே மனித தன்மையுள்ள உயர்ந்த மனிதனாக தோன்றினார் அவர்.

1 கருத்து:

  1. மனிதனுக்கு மனிதன் உதவும் மனிதநேயம் கூட அவனைப்போல இருப்பவருக்கு மட்டுமே வந்திருக்கிறது....

    பதிலளிநீக்கு