அவளும் ஒரு தேவதை-----அத்தியாயம் மூன்று.
அவனின் காந்தவர்ண சிரிப்பில் ,அவளின் மனதில் ஒரு வித கிளர்ச்சி ஏற்பட்டது. 'சீ' என்ன இது என்று தன் தலையை ஒரு தடவை உலுக்கிகொண்டாள் மீரா. அடுத்ததடவை இவனை பார்க்க கூடாது, என்று எண்ணி கொண்டாள் மீரா.
அடுத்த பத்து நிமிடத்தில் அவளின் அலுவக வாசலில் பஸ் நின்றது. அலுவகத்தில் நுழையும் போது மீராவின் கண்கள் அவளையும் அறியாமல் வீதியை திரும்பி நோக்கியது . ம்ம்ம்ம் அவனின் காரை அவளால் காணமுடியவில்லை. அவளின் மனதில் ஒரு வித ஏமாற்றமும், சலனமும் ஏற்பட்டது. அவளின் இந்த குழப்பமான மனநிலைக்கு என்ன காரணம் என்று அவளுக்கு அப்போ புரியவில்லை.
வேகமாக ஓடிச்சென்று அவளது மேசையில் அமர்ந்து கொண்டாள் மீரா.அவளது தோழி சுமதி இன்னமும் வேலைக்கு வரவில்லை. 'ஐயோ' இன்று அந்த வழுக்கை தலையிடம் நன்றாக மாட்டி விட்டாள் சுமதி, என்று எண்ணிக்கொண்டாள் மீரா. நேற்று முடித்த வேலையில் ஏதும் தவறு உள்ளதா, என்று திரும்பவும் சரிபாத்துகொண்டாள். நேற்றைய ப்ராஜெக்டை தலைமையதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. அதற்காக இண்டர்போனில் அனுமதி கேட்டு விட்டு காத்திருந்தாள். சரியாக ஐந்து நிமிடத்தில் வரும்படி அனுமதி கிடைத்தது மீராவிற்கு., அதுவரைக்கும் பக்கத்து மேசையில் இருந்த பத்திரிக்கையை எடுத்து வாசிக்க தொடங்கினாள் மீரா. 'இன்னும் சுமதி ஏன் வரவில்லை' என்ற நினைவு மனதுக்குள் இருந்தது. ஆனால் இதை யாரிடமும் கேட்க முடியவில்லை அவளிற்கு. ஆபீஸ் முடிந்து ஹொஸ்டல் போக முன்னர் சுமதி வீட்டிற்கு போக வேண்டும் என்று நினைத்தாள் மீரா. சுமதி வீடு ஆபிசுக்கு அருகில் தான் இருந்தது.அப்படியிருந்தும் அடிக்கடி சுமதி ஆபிசுக்கு தாமதமாக வருவது மீராவிற்கு கூட அவ்வளவாக பிடிப்பதில்லை.
நேற்றைய வேலையை அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு வந்து இன்றைய வேலையில் ஈடுபடலானாள் மீரா. சரியாக ஒரு மணிக்கு லஞ்ச் பிரேக். அதுவரைக்கும் நேரம் போனதே அவளுக்கு தெரியவில்லை. லஞ்ச் பிரேக்கில் தனது ஆபீஸ் தோழியரிடம் நன்றாகவே அரட்டை அடித்தாள் மீரா. அவர்கள் எல்லோருடைய பேச்சும் தமது தலைமையதிகாரியை பற்றி மட்டும் தான் இருந்தது.
'இந்த மொட்டை திருமணம் செய்யவில்லை என்று எனக்கு தெரியும்' என்றாள் கல்யாணி.
எப்படி உனக்கு தெரியும்? என்று கேட்டாள்! மீரா .
அதற்கு கல்யாணி 'இவரை யாருமே திருமணம் செய்ய விரும்பியிருக்க மாட்டார்கள்' என்று சிரித்தாள்.
'சீ போடி அப்படி சொல்லாதே அவரின் தொப்பைகாகவே நூறு பெண்கள் வந்திருப்பார்கள்'! என்றாள் காயத்திரி. அங்கே ஒரே சிரிப்பும் கலகலப்புமாக இருந்தது.
இளம் கன்று குட்டிகளின் ஆர்பரிப்பில் எல்லாமே அழகாக தெரிந்தது மீராவிற்கு. 'ஆபிசிலேயே காலம் முழுவதும் வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்'! என்று நினைத்தாள் அவள். 'இந்த ஆபிஸை தான் ஒரு காலத்தில் வெறுக்க கூடும்' என்று அப்போது பாவம் மீராவிற்கு தெரியவில்லை.
சரியாக ஐந்து மணியானது எல்லாவற்றையும் எடுத்து ஒதுக்கி வைத்து விட்டு, சுமதி வீட்டு நோக்கி நடக்க தொடங்கினாள் மீரா. அவளின் காதில் அந்த உயர்ரக காரின் ஓசை கேட்பது போல இருந்தது. தனது மனபிரமையை எண்ணி தன்னை கடிந்தபடி விரைவாக சுமதி வீட்டை நோக்கி போனாள் மீரா.இல்லை! "அவளின் செவி பொய் சொல்லவில்லை"!. அது அவனின் கார் தான். அவளின் பின்புறம் இருந்து வந்து அவளை கடந்து செல்லும் முன்னர் தனது வேகத்தின் அளவை குறைத்தது.
மீரா நிமிர்ந்து பார்க்க விரும்பவில்லை.அதற்குள் சுமதி வீடு வந்து விடவே அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தாள் மீரா. தனது தோழியிடம் இதை சொல்லலாமா? என்று ஒருகணம் நினைத்தாள் மீரா.ஆனால் அந்த என்ணத்தை உடனேயே கைவிட்டாள் அவள். இதை எப்படி சொல்வது? அந்த கார் தன் வழியில் கூட சென்றிருக்கலாம்." இல்லை அவனும் அவளை போலவே நினைத்து இருக்கலாம்,அதாவது அவன் போகும் இடமெல்லாம் அவள் தன்னை பின் தொடர்ந்து வருவதாக"
தன் மனதின் உள்ள சிந்தனைதான் பார்க்கும் இடத்தில் எல்லாம் தெரியும் "என்ற கிருஷ்ண பரமாத்வாவின் வாசகம் நினைவு வந்தது அவளிற்கு. "சீ என்ன தொல்லையடா இது" என்று ஒரே சலிப்பாக இருந்தது அவளுக்கு !.
சுமதி வீட்டிற்கு நுழையும் போது ,மிகவும் சோகமாக இருந்தாள் சுமதி.சுமதியின் முகத்தை பார்த்ததும் ,அவளது குழப்பம் எல்லாம் மறந்து போனது மீராவிற்கு.
என்ன நடந்தது? என்று கேட்டாள் மீரா.
'அப்பாவிற்கு வேலை மாற்றலாகி இருக்கு 'நாங்க இந்த இடத்தில் இருந்து வேறு ஊரிற்கு செல்கின்றோம் , 'வரும் வாரமே கிளம்ப வேண்டி இருக்கு '., 'இன்னமும் ஆபிசுக்கு கூட சொல்லவில்ல '! என்றாள் சுமதி.
கவலைபடாமல் ஜாலியா கிளம்பு. புதிய மனிதர்கள் ,புதிய அனுபவம் கிடைக்கும்.'இதுவும் உனது வீடு தானே'! எங்களை மாதிரி ஹொஸ்டல் வாழ்க்கை இல்லைதானே உனக்கு, நினைத்த நேரம் நீ இங்கு வந்து எங்களை பார்த்து விட்டு போ, இல்லை நாங்கள் எல்லோரும் உன்னை வந்து சந்திப்போம் என்றாள் மீரா. மீராவுடன் பேசியது சுமதிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது .
சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள் மீரா. மணி ஆறு அரையை தொட்டு கொண்டு இருந்தது. "சுமதி நான் கிளம்புகின்றேன் மணி ஆயிடிச்சு" என்றவள் அவளது சிற்றுண்டிக்கு, "நன்றி" சொல்லி விட்டு கிளம்பினாள்.
சுமதி வீட்டில் இருந்து வெளியே வந்த மீரா மெயின் ரோட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.அவளின் காதில் மிகவும் மெலிதாக உயர்ரக காரின் ஓசை கேட்டது.வர வர அந்த ஒலி அதிகரித்து அவளின் அருகில் கேட்டது .அவளையும் அறியாமல் அவளின் மனதில் ஒருவித பயம் தொற்றி கொண்டது.
அத்தியாயம் 4அடுத்த வாரம் தொடரும்
உறவுகளே உங்கள் கருத்துகளை சொல்லிவிட்டு செல்லுங்கள்..
நல்லதோர் முயற்சி. வாழ்த்துக்கள். பெருமைப்படுகிறேன் உன்னை நினைத்து. வாழ்க உன் தொகுப்புகள். வளர்க இத்தலம்
பதிலளிநீக்குஒரு பெரிய எழுத்தாளருக்குரிய திறமை தங்களிடம் காணப்படுகிறது. தொடரட்டும் தங்கள் தமிழ்த் தொண்டு!
பதிலளிநீக்குPM.Murugaiah