ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

அவளும் ஒரு தேவதை

அத்தியாயம் ஆறு 


"நான்  ஒரு யோசனை சொல்வேன்,ஆனால் அதை நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய்" என்றான் நீதன். 
"இல்லைடா! இந்த திருமணத்தை நான் நிறுத்தவேண்டும்,அது நின்றுவிடும் என்றால், நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார்" என்றான் கீர்த்தி.
"நீ நான் சொன்ன பின்னர் என்னை தப்பாகவோ இல்லை,எனது நட்பை பற்றி கேவலமாகவோ எண்ணக் கூடாது" என்றான் நீதன்.
"இல்லைடா, நீ என்ன சொன்னாலும், உன்னை நான் தப்பாக நினைக்க மாட்டேன். நீ என் உயிர் நண்பேண்டா" என்றான் கீர்த்தி.  
டேய் கீர்த்தி எங்கள் காலேச்சில் இருந்து ஒரு இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் தாம்பர நெடுஞ்சாலையில் ஒரு பிரமாண்டமான கடை இருக்கின்றது.அதை ஆரம்பித்து இப்போது ஒரு மூன்று வருடங்கள் தான் ஆகின்றது. அங்கு நீ என்னுடன் வரவேண்டும். ஏன் என்று கேள்வி கேட்க கூடாது என்றான் கீர்த்தி.
என்னடா நீதன்! உனக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கின்றது? நான் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கின்றேன், நீ என்னவென்றால் விளையாட்டு பிள்ளை போல கடையை பற்றி சொல்கின்றாய் என்று கோபமாக பேசினான் கீர்த்தி.
"பார்த்தியாடா நீ! இப்போது தான் நான் என்ன சொன்னாலும் என்னை தப்பாக நினைக்க மாட்டேன், என்று சொல்லி விட்டு என்னை திட்டுகின்றாய்"சாரி நான் இனிமேல் ஒன்றும் சொல்லவில்லைடா" என்றான் நீதன்.
"சாரிடா மச்சான்! எதோ டென்சனில் உன்னை திட்டி விட்டேன், இனிமேல் நீ என்ன சொன்னாலும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் உன் பின்னால் வருகின்றேன்". என்றான் கீர்த்தி.
"ஓகே டா மச்சான்! இப்போது உன் அப்பாவிடம் திருமணத்தில் உனக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல வேண்டாம். அவர் என்ன சொன்னாலும் அதன்படி நட என்ற, நீதன் ப்ளீஸ் எல்லாம் உன் நன்மைக்காகவே சொல்கின்றேன்" என்றான் அவனது முகத்தை நேராக பார்த்தபடி.
"ம்ம்ம்" என்று அரைகுறை மனதுடன் தலையை ஆட்டினான் கீர்த்தி.
"நாங்கள் இப்போது தாம்பரம் செல்ல வேண்டும், உன் காரை எடுத்து வா என்ற நீதன், எந்த வேளையிலும் உன் அப்பாவிடம் இது பற்றி நீ சொல்லி விடக்கூடாது"என்று சத்தியம் வாங்கி கொண்டான்.
காரை கீர்த்தி எடுத்துகொண்டு வர நீதன் ஏறி அமர்ந்து கொள்ள கார் தாம்பரம் நோக்கி வேகம் எடுக்க தொடங்கியது.
காரில் ஏறி அமர்ந்து கொண்ட நீதன் மிகவும் அமைதியாக இருந்தான். அவனது முகத்தில் ஏராளமான எண்ண அலைகள் தெரிந்தது.
கீர்த்திக்கு என்ன பேசுவது என்று தெரியாத குழப்பத்தில்,அவனும் அமைதியாகவே கார் ஓட்டிக்கொண்டு இருந்தான். 
அவனது சிந்தனையும் அவனது அப்பாவையும் அவரது பேச்சையும் மட்டும் சுற்றி சுற்றி ஓடி கொண்டு இருந்தது. 
அவனது தாய் இருந்த உயிருடன் இருந்த வரையிலும் அதாவது அவனது பதினைந்தாவது வயது வரையிலும் கீர்த்தி மிகவும் ஒழுங்கான பையனாக தான் இருந்தான். 
அவனது தாய் இறந்தவுடன் அந்த கவலையை மறக்க தனது முழு நேரத்தையும் ஆபிசில் அவனது தந்தை செலவிட  அவனது வசதியும் மிகவும் அதிகமாகவே உயர்ந்தது . அதுவரையிலும் வெறும் பணக்காரர்கள் என்ற பெயரில் இருந்த அவனது தந்த கோடிஸ்வரன் ஆனார். எப்படி அவன் கையில் அளவுக்கு அதிகமாக பணம் இருந்ததோ அதே போல அளவுக்கு அதிகமான கெட்ட நட்புக்களும் கிடைத்தது.வார இறுதியில்  ஒருநாளில் மட்டும் ஒன்று இரண்டு நண்பர்களுடன் பாப் போக ஆரம்பித்த அவன், நாளடைவில் ஒவ்வொரு நாளும் போக ஆரம்பித்தான்.அவனது கவனமும் படிப்பில் இருந்து திசை மாறி பாப்,கிளப்,குடி என்ற மூன்றை மட்டும் சுற்றி சுற்றி வந்தது. எதோ தெரியவில்லை இன்னும் அவனுக்கு பெண்களின் சகவாசம் மட்டும் கிடைக்கவில்லை அளவுக்கு அதிகமாக பெண் தோழிகள் இருந்தாலும் அவனது மனதில் யாருமே இடம் பெறவில்லை.எல்லோரும் அவனது பணத்தை மட்டும் பார்த்து வந்த பெண்கள் என்பது அவனது அபிப்பிராயம்.
ஏன் அவனது நண்பர்கள் கூட அடிக்கடி நக்கல் அடித்து கொள்வார்கள்.ஏன்டா கீர்த்தி பெண்சுகம் மட்டும் வேண்டாம் என்று இருக்கின்றாய்.உனக்கு ஏதும் உடம்பில் பிரச்சனையா? என்பார்கள்.
அவனுக்கு அதற்கு மட்டும் பதில் தெரியவில்லை. ஆனால் அவன் எந்த பெண்ணையும் தொட்டு பார்த்து விட வேண்டும் என்று மட்டும் நினைக்கவில்லை. பெண்கள் விடையத்தில் நீதன் மிகவும் பலவீனவனாக இருந்தாலும் கீர்த்தியுடன் பெண்கள் பற்றி பேசாமல் இருப்பதால் அவனுக்கு நீதனை மிகவும் பிடிக்கும்.
"டேய்!  கீர்த்தி இங்கே தான் நிறுத்தடா" என்றான் நீதன். அதிகமாக கார் ஓட்டும்  பழக்க தோஷத்தில் மிக சரியாக தான் கார் ஒட்டி வந்ததை மனதுக்குள் எண்ணிக்கொண்டு காரை நிறுத்தினான் கீர்த்தி.


எதிரிலே இரண்டு அடுக்கு மாடியில் ஒரு உயர்ரக பலசரக்கு அங்காடி இருந்தது. அதன் பெயர் தங்க எழுத்துக்களால்"ஸ்வேதாஷு பல் பொருள் அங்காடி" என்று விட்டு விட்டு மின்னிக் கொண்டு இருந்தது.அந்த கடையின் முன்னர் உள்ள கார் பார்க்கில் காரை நிறுத்திய கீர்த்தியும் நீதனும் கடைக்குள் நுழைந்தார்கள். உள்ளே சென்றது இரு அழகான பெண்கள் வரவேற்பறையில் நின்று சிரித்து கொண்டு இருந்தார்கள். 


"என்னடா இது"? என்றான் கீர்த்தி. 
"இல்லடா! நாங்கள் ஏதும் பொருட்கள் கொண்டுவந்தால் அந்த பெண்களும் அதை கொடுத்து ஒரு டோக்கன் வாங்கி கொண்டு சென்று, திரும்பி வரும் போது அந்த டோக்கனை அவர்களிடம் கொடுத்து  பொருட்களை பெற்று கொள்ளலாம்" என்றான் அவன். 
"அது தெரியும் டா எனக்கு"  எதற்கு இங்கு கூட்டி வந்தாய்" என்றான் கீர்த்தி.
"நீ இப்போது கடையை சுற்றி மட்டும் பார், நான் பிறகு சொல்கின்றேன்" என்றவன் முன்னே செல்ல அவனை பின்தொடர்ந்தான் கீர்த்தி.


அவனது வணிக நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஓரளவு சிறிய அளவில் இருந்தாலும் கடை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு, எல்லாவற்றிலும் ஒரு புதுமையை புகுத்தி இருந்தார்கள். எல்லா விதமான வசதியும் இருந்தது. பேங்க் இல் இருந்து நகைக்கடை வரை அந்த அங்காடியில் இருந்தது.ஆரம்பிக்கபட்டு மிகவும் குறைந்த காலம் தான் என்பதை கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வைத்து தெரிந்தது கொண்டான் அவன். அவனது கடைகள் எல்லாவற்றிலும் எப்போதுமே கூட்டம் அலைமோதிக்கொண்டு இருக்கும்.


ஒரு ஒருமணி நேரத்தை அந்த கடையில் செலவழித்த நீதன் ,அவனிடம் ஒரு உயர்ரக விஸ்கி போத்தல் வாங்கும் படி கேட்டு கொண்டான்.
"சரி" என்று தலையை ஆட்டிய கீர்த்தி, நீதனுக்கு பிடித்த உயர்ரக "ஜாக் டானியல்" போத்தலை வாங்கி கொண்டு காரை நோக்கி போனான்.
ஒரு பத்து நிமிடம் கழித்து நீதனும் அவனுடன் வந்து இணைந்து கொண்டான். கார் திரும்பவும் அவனது வீட்டை நோக்கி வேகம் எடுக்க தொடங்கியது.  
"சரிடா மச்சான்"!இப்போதாவது சொல்லு எதற்கு இங்கு கூட்டி கொண்டு வந்தாய்? என்றான் கீர்த்தி 
சிறிது நீரம் அமைதியாக இருந்த நீதன், "டேய் மச்சி நாங்கள் இப்போது பார்த்த கடையை ஒரு நாள் பிளான் போட்டு கொள்ளை அடிக்க வேண்டும்" என்றான் நீதன். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் நான் செய்வேன். நீ இப்போது உன் அப்பாவிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி ஒரு எட்டு லட்சம் கேட்டு வாங்கி தரவேண்டும்" என்றான் அவன்.
அவன் சொன்னதை கேட்ட கீர்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலையில், காரை ஒரு  ஓரமாக நிறுத்தி விட்டு திக்பிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தான் அவன்.


தொடரும் 
தேவதை இன்னும் வருவாள் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக