எமது மதிப்புக்குரிய தமிழ் மக்களே, கல்வி மான்களே, இளம் தலைமுறையே!
ஆண்டாண்டு காலமாக எமது கல்வி அறிவின் மீதும் எமது வணிக ரீதியான வெற்றிகளின் மீதும் தமது கால்களை அழுத்தியே வைத்திருந்த சிங்கள பேரினவாதத்தின் கோர பிடியில் இருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாக்க முதலில் அகிம்சைவழியில் தோற்றம் பெற்ற எமது சுதந்திர போராட்டமானது சிங்கள சக்திகளால் மனிதாபிமானமற்ற முறையில் ஒடுக்கபட்டு பின்னர் ஆயுத ரீதியாக எழுச்சி பெற்றது. ஆயுத ரீதியில் எழுச்சி பெற்ற போராட்டமும் உலக வல்லாதிக்க சக்திகளால் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டு அழித்து ஒழிக்கப்பட்டது.எமது ஈழ விடுதலை போராட்டம் முழுமையாக அழித்து ஒழிக்கப்பட்டாலும் ஒவ்வொரு தமிழ் மக்கள் மனதிலும் ஆறாத ரணமாக எமது விடுதலை வேட்கையும் சுதந்திர தாகமும் ஒளிந்து கிடப்பதை யாராலும் மறுத்து விட முடியாது. உலகம் எங்கிலும் வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் எமது நாட்டிற்காக தம்மையே ஆவுதியாக்கிய மாவீர செல்வங்களையும் மக்களையும் நினைவு கூறும் முகமாக தமது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வுகளில் பங்குபற்றிய விடயமானது எமது மக்கள் பிளவு பட்டு விட்டார்கள் என்றோ விடுதலை புலிகள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்றோ அர்த்தம் கொள்ள முடியாது. இன்று எமது விடுதலை போராட்டத்தை வழிநடத்தும் தலைமை மட்டும் தான் தம்மை மீண்டும் செப்பனிட்டு கொள்ளவேண்டிய முக்கியமான பொறுப்பில் உள்ளார்கள். புலம் பெயர் நாடுகளில் பிளவு பட்டு நிற்கும் தலைமைத்துவமானது இதய சுத்தியுடனும் விடுதலை வேட்கையுடனும் மக்களை ஒருங்கமைத்து கொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் முக்கிய தேவையாகும்.
யாழில் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பல்கலை கழக மாணவர்கள் மீதான தாக்குதலானது எமது வளர்ந்து வரும் இளம் தலைமுறையின் அறிவின் மீதான தாக்குதலாகும். இன்று வடக்கு கிழக்கில் வாழும் இளம் தலைமுறையானது சிறிலங்கா வல்லாதிக்க சக்திகளால் திட்டமுறையில் கலாச்சார சீர்கேட்டில் தள்ளி விடப்பட்டிருப்பதும் மீதியுள்ள இளம் தலைமுறையின் கல்வியின் மீதான தாக்குதல்களும் எமது வருங்கால தலைமுறையை முற்று முழுதாக ஒரு அடிமைகளாகவே மட்டுமே வைத்துகொள்ள நினைக்கும் சிங்கள தலைமையின் தாரக கோட்பாடாகவே பார்க்க முடிகின்றது.
காலம் காலமாக ஆண்டு வந்த எம்மினம் இன்று அடிமையாக்கப்பட்ட சம்பவமானது எமது மூதாதையரும் ஒரு சில தமிழ் தலைமைகளும் தேவையற்ற விட்டுக்கொடுப்புகளில் ஈடுபட்டதையே காரணமாக கொள்ள முடியும். எமது மதிப்புக்குரிய தலைவர் போல தெளிந்த சிந்தனையுடனும் இதய சுத்தியுடனும் செயற்படும் தலைமைத்துவம் ஒன்றை எமது மக்களுக்கு காட்டவேண்டியது இன்று வாழும் பல தலைமைகளின் முக்கிய கடப்பாடாகும். சிறிலங்கா அரசின் நயவஞ்சகமான அரசியல் காய் நகர்வுகளில் இருந்து எம்மையும் எமது மக்களையும் பாதுகாக்க வேண்டியது தமிழனாக பிறந்த எமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
மீண்டும் எழுச்சி பெற்றுள்ள எமது கல்வி மீதான தாக்குதலானது எமது திருநாட்டில் வாழும் எம் இனத்தையே அழித்து எமக்கென ஒரு சிறு நிலத்தையும் வழங்காமல் எமது உணர்வுகளையும் எமது தியாகங்களையும் முற்று முழுதாக முடக்கி விடும் சிங்கள அரசின் மிக மோசமாக தனிசிங்கள பேராண்மை கோட்பாடாகும்.இவ்வாறு கேடு கெட்ட நடவடிக்கையில் சிங்களம் ஈடுபட இங்குள்ள தமிழ் தலைகள் தமது நாற்காலிக்கு போட்டி போடுவது மானமுள்ள எந்த தமிழ் மக்களாலும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகும்.
நாம் புலம் பெயர் நாடுகளில் இருந்துகொண்டு ஐந்தாம் கட்ட போர் வெடிக்கப்போகின்றது,விடுதலை போராட்டம் ஆரம்பித்து விட்டது என்று அறிக்கை விடுவதும் இந்திய தலைவர்கள் விடுதலை புலிகள் மீண்டும் போராட புறப்பட்டு விட்டார்கள் என்று அறை கூவல் விடுவதும் எமது இனத்தையும் எமது மக்களையும் மீண்டும் மீண்டும் படு குழியில் தள்ளும் ஒரு நிகழ்வாகவே நோக்க முடியும். உண்மையில் நாம் இன்று எந்தவிதமான பலமும் இன்றி "தலைவன் இல்லா மந்தைகள் போல" எதோ ஒரு திசையில் ஆளாளுக்கு பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்.
நாம் எமது மேலாண்மை மிக்க தலைவரை எப்போதும் மதிப்போம். ஆனால் எமது அண்ணாவின் பெயரையும் விடுதலை புலிகளின் பெயரையும் பயன்படுத்தி தமது வம்சத்தை மட்டுமே வளர்க்க பாடுபடும் துரோகிகளையும்,கேடுகெட்ட தலைவர்களையும்,இணைய செய்தி நிர்வாகங்களையும் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எமது மதிப்புக்குரிய தமிழ் மக்கள் இன்றும் எம் மண்ணையும் எம் மாவீர செல்வங்களையும், எம் தலைவனையும், ஈழத்தில் வாடும் எம்மின செல்வங்களையும் நேசிக்கின்றார்கள் என்பதில், எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் எம்மை உண்மையாக பாதுகாக்க எம்மை ஒரு குடைக்குள் அரவணைக்க ஒரு உன்னத தலைவன் இன்றி இருப்பதுதான் இன்று எமது இனத்திற்கு பிடித்த சாபக்கேடு.
உண்மை தான், அந்நிய தேசத்தில் நாம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தாயகத்தில் நொந்து தவிக்கும் உறவுகளுக்கு உதவிகள் செய்வதை விட்டு விட்டு, ஐந்தாம் கட்டப்போர் என்று பிதற்றுவது எம் இனத்திற்கு நாமே செய்யும் மாபெரும் துரோகமாகப் போய்விடும். நம் உறவுகளிடம் இழப்பதற்கு இனி என்ன தான் உள்ளது. எனவே வேடிக்கையல்ல நம் உறவுகளின் வாழ்க்கை என்பதை நன்குணர்ந்து, அவர்களுக்கு வேறு எவ் வழிகளில் எம்மால் உதவ முடியும் என்பதை மட்டும் சிந்தித்து செயற்படுவது நல்லது. வேறு எதிர்பார்ப்புகளுக்கு காலம் தான் எமக்கு பதில் தர வேண்டும்.
பதிலளிநீக்கு