தமிழராகிய நாம் எமது வரலாற்றிலே பல கசப்பான உண்மைகளை கடந்தே வந்துள்ளோம். ஆனாலும் எம்மினம் இன்றும் பல வரலாற்று உண்மைகளை மறந்தோ அல்லது மறக்கடிக்கப்பட்டோ வாழ பழகி கொண்டுள்ளோம்.
விடுதலை உணர்வில் நாம் என்றுமே சளைத்தவர்களோ அல்லது வீர உணர்வை இழந்தவர்களோ அல்ல. எமது விடுதலை போராட்டம் முழு மூச்சுடன் வீறு கொண்டு எழுவதற்கும் இந்திய தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் புலம்பெயர் ஈழ தமிழர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றால் மிகையாகாது.இந்திய தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்த முடிந்த ஈழ புலம் பெயர் தமிழர்களால் இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த தவறியமை எமது ஈழ போராட்டம் முடிவுக்கு வருவதற்கு முக்கியமான காரணியாக அமைந்தது என்பதே நிதர்சனமாகும்.
இன்று விடுதலை போராட்டம் இன்னும் ஒரு பரிமாண வளர்ச்சியை அடைந்துள்ளது, இந்த வளர்ச்சியை தாங்கி பிடித்து மேலும் பாரிய எழுச்சியுடன் வளர்த்து எடுக்க ஈழ தமிழர்களாகிய நாம் உலக அரசியலில் மேலும் வலுவாக காலூன்ற வேண்டியவர்களாகின்றோம்.அதற்காக நாம் முதல்கட்டமாக எமது இளைய சமுதாயத்தை சரியான முறையில் வழிநடத்த வேண்டியவர்களாகின்றோம்.
எமது இளைய சமுதாயத்தை ஒரு குறுகிய மனப்பான்மையுள்ள பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி சூழலை பயன்படுத்தும் இயந்திரங்களாக வளர்க்க நாம் மிகவும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளோம். அதனை தவிர்த்து இங்குள்ள இளம் சமுதாயத்தினை ஒவ்வொரு நாட்டில் உள்ள அரசியல் வலைக்குள் நகர்த்த வேண்டியது எமது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
தமிழ் மொழியை எமது சிறார்களுக்கு வழங்க தயங்காத நாம், தமிழில் உலக அரசியலை கற்பிக்க மறந்து விடுகின்றோம். எவ்வாறு நாம் உலக அளவில் தமிழ் மொழி கல்வியை கற்பிக்கின்றோமோ அதே போன்று ஈழ போராட்டத்தையும் அதன் தோற்றத்தையும் உலக நகர்வுகளையும் கற்பிக்க தவறுகின்றோம். இந்த தவறுகளை திருத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது.
இலங்கை அரசியலில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் எமது இனத்திற்கு எந்த ஒரு விடிவையும் தந்துவிட போவதில்லை . மஹிந்த குடும்பம் செய்த கேடு கெட்ட அரசியலையே சிங்கள அரசியலும் அரசியல்வாதிகளும் செய்வார்கள் என்பது வெளிப்படையான ஒரு உண்மையாகும்.
ஈழ தமிழர்களாகிய நாம் எமது அரசியல் பலத்தினை உலக அளவில் வென்று எடுப்பதன் மூலமே எமக்கு ஒரு நிரந்தரமான தீர்வினை எட்ட முடியும் .எமது தலைவரும் அதற்காக வழியினை எமக்கு இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு மாவீரர் உரையில் முன்மொழிந்ததை நாம் நினைவு கூற விரும்புகின்றோம்.
உலக அரசியலில் குழந்தையை போல தவழும் நாம் வேகமாக எழுந்து நடைபோட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எவ்வாறு ஈழ போராட்டம் வீச்சாக தோற்றம் பெற்றதோ அதேபோல உலக அரசியல் போராட்டமும் தோற்றம் பெற நாம் ஒவ்வொருவரும் அயராது பாடுபட வேண்டும்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
நிலாகவி
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக