ஞாயிறு, 7 டிசம்பர், 2014

வெளிநாட்டு தமிழரும் விடுதலை உணர்வும்


இன்றைய வெளிநாட்டு தமிழரின் விடுதலை உணர்வின் உண்மையான மனநிலை என்ன என்று கேள்விகேட்டால் எப்போதாவது கொளுத்தும் வெயிலில் கரையொதுங்க நினைக்கும் ஈன மனநிலை என்றுதான் சொல்லவேண்டும்.

வெளிநாட்டில் புலம்பெயர்ந்து 'எதிலிகள்' என்று வாய்விட்டு அழுது, விடுதலை போராட்டத்தால் தாம் மிகவும் மோசமாக பாதிக்கபட்டோம் என்று மனம் கூசாமல் பொய்களை புகன்று, வெளிநாட்டில் வசிப்பதற்கான அனுமதிகளை பெற்ற பின்னர் தமது குடும்ப நலன்களை மட்டுமே முன்னிறுத்தி பணம் உழைக்க பாடுபடும் இயந்திரங்களாக மாற்றி கொண்டவர்கள் ஆரம்ப காலங்களில் இடம்பெயர்ந்த தமிழர்கள்.இவர்களால் விடுதலை போராட்டத்திற்கு எந்த பங்களிப்பு இல்லாது போனாலும் அது விடுதலை போராட்டத்தின் வளர்ச்சியை நிறுத்தவும் இல்லை என்பதே உண்மையாகும்.

ஈழத்தில் விடுதலை போராட்டம் உச்சம் பெற்றபோது அதாவது தொண்ணூறு தொடக்கம் இரண்டாயிரம் வரையில் புலம்பெயர் நாடுகளுக்கு இடம்பெயர்ந்தோரில் எண்பது சதவீதமானார்கள் விடுதலை உணர்வுடன் ஒன்றி இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அவர்களால் முழு மூச்சாக வெளிநாட்டு அரசியலுடன் மோத முடியாத வெளிநாட்டு மொழியறிவு திறன் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். மீதி இருபது சதவீதமானவர்களும் விடுதலை போராட்டத்தினை தமது சொந்த நலன்களுக்காக பயன்படுத்தும் சுயநலம் மிக்க தலைவர்களாகவே காணப்படுகின்றனர். தமது சுயநலத்தின் உண்மை தன்மையை உலக தமிழர்கள் உணர்ந்த கொள்ள கூடாது என்பதற்காக இடையிடையே விடுதலை போராட்டத்தில் உண்மை உள்ளவர்கள் என்று காட்டி கொள்வதற்காக சில நல்ல நடவடிக்கையில் ஈடுபட்டு கொள்ளும் மோசமான துரோகிகள்.இவர்களால் ஓரளவு விடுதலை போராட்டம் வலு இழந்தாலும் மோசமாக பாதிக்கப்படவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னர் புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களின் மனநிலை என்பது மிகவும் மோசமான அதாவது விடுதலை போராட்டத்தினை சொல்லி அகதி அந்தஸ்து பெற்றவுடன் ஒழுக்க கேடான பல வேலைகளை செய்யும் காவாலிகளாகவே வலம் வருகின்றனர். விடுதலை போராட்டம் ஆரம்பிக்கும் போது இடம்பெயர்ந்த தமிழர்கள் தமது குடும்ப நலன்களை கருத்தில் கொண்டு செயற்பட்டாலும் ஈழ தமிழர்களின் ஒழுக்கம் கட்டுபாடு பண்பாட்டுடன் வாழ்ந்தார்கள் .ஆனால் இரண்டாயிரத்துக்கு பின்னர் இடம்பெயர்ந்த  ஈழ தமிழர்களில் அநேகர் எமது பண்பாடு கலாச்சாரம் ஒழுக்கம் என்பவற்றை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடும் ஈன பிறவிகளாகவே காணப்படுகின்றனர்.

மூன்றாம் கட்டமாக இடம்பெயர்ந்த ஈழ தமிழர்களால் விடுதலை போராட்ட வரலாறு ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதே உண்மையான ஒன்றாகும். விடுதலை போராட்ட வடிவம் மாற்றம் பெற்ற இந்த காலகட்டத்தில் கடமை, கண்ணியம், கட்டுபாடு, மொழியறிவு, உலக அரசியல் என்பன எமது ஈழ போராட்டத்திற்கு சவாலாக அமையும் மிக முக்கிய காரணிகளாகும்.இந்த காரணிகளை எவ்வாறு எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதினை மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையில் மூன்றாம் கட்டமாக இடம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் உள்ளார்கள். அதனை விடுத்து கேளிக்கைகளிலும் விடுதிகளிலும் தமது பொழுதினை தொலைக்காமல் எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னுயிர்களை ஈகம் அளித்த மண்ணின் மாவீரங்களை மனதில் நிறுத்தி இனிவரும் காலங்களில் மிகவும் பொறுப்பாகவும் கண்ணியமாகவும் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டில் பிறந்து வளரும் எமது இளம் சமுதாயம் எம் மண்ணின் மகிமையும் விடுதலை போராட்டத்தின் மகத்துவத்தையும் கண்முன்னே உணர்ந்து கொள்வார்கள் .
ஆகவே கடைநிலை இடம்பெயர்ந்த ஈழ சமுதாயமே எமது  உண்மையான வேட்கையை புரிந்து இதயசுத்தியுடன் இனி வரும் காலங்களை வழிநடத்தி செல்லுங்கள் .
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக