வியாழன், 6 ஆகஸ்ட், 2015

இன்றைய ஈழ அரசியலும் தமிழ் மக்களும்


மதிப்பாக வாழ்ந்த எம் தமிழினம் இன்று பல்வேறுவிதமான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் இந்த நேரம், சிறிலங்காவின் இன்றைய தேர்தல் களமானது எமது மக்களின் கழுத்தினை நெரிக்கும் தூக்கு கயிறாக மாறி இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.எம் தமிழ் மக்கள் இன்று எந்த கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று தெரியாத நிலையினை  ஏற்படுத்தி இருப்பதில் சிங்கள ஆதிக்க சக்தி வெற்றி ஈட்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ராஜதந்திர வழியில் காய்களை நகர்த்தி இலக்கை மிக நேர்த்தியாக வடிவமைப்பதில் சிங்கள ஆதிக்கம் என்றுமே சளைத்தவர்கள் அல்ல, என்று மீண்டும் ஒருமுறை உலக அரங்கிற்கு படம் போட்டு காட்டியுள்ளது சிங்கள தலைமைத்துவம்.

இந்த சிங்கள தலைமையின் வெற்றியினை நாம் எவ்வாறு முறியடிக்க போகின்றோம்? இந்த வெற்றி யாரால் எவ்வாறு வடிமைக்கபட்டு நடைமுறையில் கொண்டுவரப்படுகின்றது என்பதனை எமது தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்களா?

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதனை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக கொண்டு வந்த பெருமையும் ஒழுங்கமைப்பும் விடுதலை புலிகளையே சாரும். விடுதலை புலிகள் ஆதிக்க சக்தியாக இருந்தவரை விடுதலை புலிகளின் கட்டளைகளுக்கேற்ப செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தான்தோன்றிதனமாக தனது இஷ்ரப்படி செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயலாகும்.

''ஜனநாயக போராளிகள் கட்சி'' என இன்னும் ஒரு கட்சி விடுதலை புலிகளின் பெயரை சொல்லி தோற்றம் பெறுவதற்கும் ஏதுவாக அமைந்தவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பே.
இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் என்ன? என்பது பலருக்கு புரிந்திருக்க நியாயம் இல்லை. நலிந்து போன எமது மக்களையும் எமது விடுதலை போராட்ட அமைப்பையும் களங்கம் செய்யும் நோக்குடன் மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் ஒரு கீழ்த்தரமான அரசியல் நாடகமே இந்த ''ஜனநாய போராளிகளின் கட்சி'' என்ற கட்சியின் துவக்கமாகும். இன்றைய காலகட்டத்தில் விடுதலை புலிகளின் பெயரை சொல்லிக்கொண்டு சிறிலங்காவில் விடுதலை புலிகள் அமைப்பானது ஜனநாயக முறையில் எழுச்சி பெறுவது என்பது சாத்தியமா? இன்றும் எமது கணக்கில் அடங்காத போராளிகள் சிறிலங்காவின் சிறை முகாம்களில் அடைபட்டு இருப்பதுடன் காணமல் போதலும் கற்பழிப்பும் அரங்கேற்றம் நடந்துகொண்டிருக்கும் போது இந்த புலிகளின் பெயரை சொல்லி இவ்வாறு ஒரு புது கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதனை எத்தனை தமிழர்கள் உணர்ந்துகொண்டிருப்பார்கள்? இந்த கட்சி உருவாக்கபட்டதன் நோக்கம் என்ன? தெளிவாக சொல்லவேண்டுமென்றால் குழம்பி இருக்கும் குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதே சிங்கள வேடதாரிகளினதும் அவர்களுக்கு துணைபோகும் கேடுகெட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாகும்.

விடுதலை புலிகளின் பெயரை சொல்லி உருவாகிய ஜனநாய கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதனை உலக அரங்கிற்கு எடுத்து காட்டுவதன் மூலம் ஈழத்தில் நடந்த கொடுமைகள் எல்லாவற்றிற்கும்  விடுதலை புலிகள் தான் காரணம் என்றும் அதனாலேயே அவர்கள் பெயரில் உருவாகிய கட்சி ஈழத்தில் தோல்வியை தழுவியது என்று காட்டி சிங்கள தலைமையை ஐநா சபையில் இருந்து பாதுகாக்கும் ஒரு கேடு கெட்ட வேலையை செய்யவே விளைகின்றது.
அது தவிர விடுதலைப்புலிகள் மீண்டும் தோற்றம் பெற்றுவிட்டார்கள் என்ற தோற்றப்பாட்டை உலக அரங்கில் அரங்கேற்றி வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ நிலைகளை பலபடுத்துவதுடன் அழிந்துகொண்டிருக்கும் எமது கலாச்சாரத்தை மீண்டும் மீண்டும் சீரழித்து வளர்ந்துவரும் எமது சமுதாயத்தை சிந்திக்க முடியாத ஒரு வளர்ச்சி குறைந்த சமுதாயமாக மாற்றவே சிங்களம் தாண்டவம் ஆடுகின்றது.
மேலும் தமிழ் மக்களின் வாக்குக்களை பிரித்து உறுதியான ஒரு தமிழ் கட்சியாக எந்த ஒரு கட்சியும் பாராளுமன்றத்தில் தோற்றம் பெறாமல் செய்வதன் மூலம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாமல் காலவிரையம் செய்வதன் மூலம் ''ஈழம்'' என்ற ஒரு சொல்லே வரலாற்றில் அழிந்து போகவே சிங்களம் விரும்புகின்றது.
எனவே மதிப்பு மிக்க தமிழ் மக்களே நாம் மிகவும் தெளிவாக சிந்தித்து செயற்படும் காலமிது.எமது கரங்களை பலப்படுத்துவதன் மூலமே எமது அரசியல் ஆசைகளையும் எமக்கான அங்கீகாரத்தையும் நாம் பெற்று கொள்ள முடியும்.
சிறிலங்காவில் பிளவுபட்டு போட்டியிடும் தமிழ் கட்சிகள் ஒன்றுபடுமா? அப்படி ஒன்றுபடாவிட்டால் எமது அடுத்த தெரிவு என்ன ? தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலை கூட்டணிக்கு தமது வாக்குகளை போடலாம் அல்லது கயேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் உள்ள தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தமது வாக்குகளை போடலாம்..
ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியாலும் எமது தேசியத்தையோ எமது உரிமையையோ பெற்று தந்துவிட முடியாது. நாம் எமக்கான எமது குரல்களை உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க செய்வதன் மூலமே எமது உரிமையை வென்று எடுக்கமுடியும்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

எழுத்தாக்கம்
காவியா  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக