திங்கள், 25 மார்ச், 2019

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழர்களும்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழர்களும்
ஈழ போராட்டத்தின் அழிவு என்பது 2009 ஆண்டு தான் என்று ஆழமாக நம்பிய எமது அறியாமையை நாம் அழித்திட வேண்டிய சூழலில் நாம் வாழ்கின்றோம்.
ஈழ போராட்டத்தின் எழுச்சியும் தோற்றமும் எமது உறுதியான நிதி கட்டமைப்பில் பொருளாதார நேர்த்தியில் அமைந்திருந்தது. புலம்பெயர் சக்தியின் நிதி கட்டமைப்பின் பொருளாதாரத்தை அசைத்த சிங்கள சக்திகளின் இராசதந்திரமே எமது போராட்டத்தின் தோல்விக்கான விதை என்பதை நாம் அறிந்திட வேண்டும்.
அதற்கான விதை கே பி அவர்களின் கீழ் ஒன்றிணைந்த அனைத்து நபர்களும் என்பதை உணரவேண்டும்.
ஒரு உயிர்க்கு பயந்து தனது உயிர்மீதான ஆசையில் எமது பொருளாதாரத்தை சிங்கள அரசியல்வாதிகளிடம் கையளித்த கே பியின் பின்னால் இருக்கும் அனைவரையும் நாம் புறம்தள்ள வேண்டும். உறுதியான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இப்போதுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பாரிய குற்றசாட்டினை வைக்கும் நபர்கள் குறித்த நாடுகடந்த அரசாங்கத்தை தம்கரம் எடுத்து நீதியாக செயற்பட முன்வருகின்றார்களா ?அல்லது குற்றம் சுமத்திவிட்டு சிங்களவர்களின் கரங்களை பற்றிக்கொண்டு நின்று மேலும் மேலும் குற்றம் சுமத்த போகின்றார்களா?
ஒரு அமைப்பை குற்றம் சுமத்துவது எளிதான செயற்பாடே.குற்றங்களை களைந்து அந்த அமைப்பை சீர்படுத்தி நீதியாக செயற்பட ஆளுமையுள்ளவர்கள் எங்கே உங்கள் கரங்களை உயர்த்துங்கள்.
நாடுகடந்த அரசாங்கத்தில் பல உண்மையுள்ள விசுவாசிகள் இருப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல திருடர்கள் இருப்பதும் உண்மை . தகவல்களை திருடி சுயநலநோக்கில் செயற்படுபவர்கள் இருப்பதும் உண்மை. இவர்களை புறம்தள்ளி குறித்த தேர்தலில் சரியான ஆளுமைகளை உள்வாங்க ஆவண செய்யுங்கள் ....
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு மாதாந்த சம்பளத்தை வழங்குவோம் என்று ஒரு திட்டத்தை கொண்டுவாருங்கள். அவர்களின் செயற்பாடு சரியான முறையில் அமையாவிடில் அவர்களை பணிநீக்கம் செய்து குறித்த செயற்பாட்டினை கொண்டுசெல்ல வேறு நபர்களை கொண்டுவாருங்கள் .
நாடுகடந்த அரசாங்கத்தின் தேர்தல் என்று பணத்தை செலவிடாது ஒவ்வொரு நகரிலும் உள்ள தமிழ்பாடசாலைகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி கூட்டங்களை ஒழுங்கமைப்பு செய்து நீதியான தரவுகளை வழங்குங்கள்.குறித்த பாடசாலையின் நிர்வாகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு ஆதரவு தரவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன ? என்பதனை தெளிவுபடுத்தி கடிதங்களை அனுப்ப சொல்லுங்கள் .குறித்த பாடசாலைகளில் இருந்து வரும் கடிதங்கள் நீதியானதாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் அவர்களின் குற்றசாட்டினை சீர்படுத்தி உங்களின் நிலைப்பாட்டினை உறுதிசெய்து கொள்ளுங்கள் . குறித்த நபர்களின் குற்றசாட்டு சரிசெய்த பின்னர் அவர்களின் தொடர்புகளை சரியான முறையில் பேணுங்கள் ...
முதலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் பணியாற்றும் நபர்களை ஆளுமையானவர்களாக தேர்ந்தெடுங்கள் .
வயதானவர்களை புறம் தள்ளாமல் இளைஞர்களில் ஒழுக்கமான நீதியான நபர்களை தேர்ந்தெடுப்பது அவசியம் என்பேன்..
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு ஆளுமைகளும் ஒழுக்கம் சார் ஆவணம் வழங்க வேண்டும். குறித்த ஆவணம் Disclosure and Barring Service என்ற இடத்தில் பெற்று வழங்கப்பட வேண்டும்.
ஆகவே எல்லாவற்றிலும் குற்றம் சுமத்தி ஒவ்வொரு கட்டமைப்பையும் அழிக்கும் நடவடிக்கைக்கு செல்லாமல் சரியான முறையில் குறித்த அமைப்புகளை நீதியாக மாற்ற முன்வாருங்கள்
....எமது மேதகுவை அதிதீவிரமாக நேசிப்பவர்கள் நீதியை எதிர்கால திட்டங்களை சரியாக உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருக்கும் 30 வீதமான கெட்டவர்களுக்காக 70 வீதமான உண்மையானவர்களை ஏதுமற்றவர்களாக மாற்றி அவர்களை முடக்கி நாம் மீண்டும் ஒரு அமைப்பை உருவாக்க இன்னும் 10 வருடங்கள் செல்லும். அதற்குள் எமது இளைய சமுதாயம் வேறு எண்ணம் சிந்தனைக்குள் சென்று எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.காலம் பல விடயங்களை மழுங்கடித்து விடும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே தமிழர்களின் நிலையாடும் மாறிடக்கூடாது என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த பதிவு ...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக