செவ்வாய், 17 செப்டம்பர், 2019

வெளிநாட்டு வாழ்க்கை

ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் வாழும் பலர் குறிப்பாக இளைய சமுதாயம் வெளிநாடு பற்றிய ஒரு கனவு வாழ்க்கையிலேயே வாழ்கின்றது.வெளிநாடு என்றால் பல வண்ண கனவுகளும் ஒரு மாய தோற்றமும் இவர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது.இந்த கனவு விதைக்கப்பட முக்கிய காரணமாய் அமைந்தது சினிமா என்று சொன்னால் அது மிகையாகாது.
உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் என்ன? அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதையே இந்த கட்டுரை அலசுகின்றது.
வெளிநாட்டு வாழ்க்கையானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை கற்று கொடுக்கின்றது. 1980 காலபகுதிக்கு முன்னர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் முழுக்க முழுக்க மேலைநாட்டவர்களுடன் பின்னி பிணைத்து எம் தாய் நாட்டு கனவுகளையும் மக்களையும் மறந்து ஒரு கனவுலக வாழ்க்கையிலேயே அநேகர் வாழ்கின்றனர்.அதிலும் குறிப்பாக படித்து நல்ல வாழ்க்கை வாழ்பவர்கள் முற்று முழுதாக ஊரின் நினைவுகளை மறந்தவர்களாகவே வாழ்கின்றனர்.தமது சொந்த நலனை கருத்தில் கொண்டு சிலர் வெறும் பேச்சளவில் அரசியல் பேசும் சக்திகளாகவும் வாழ்கின்றனர். இவர்களால் எமது தமிழ் சமுதாயத்திற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதே உண்மையாகும்.
1980 இல் இருந்து 1990 வரை புலம்பெயர்ந்த பலரும் தமது சொந்த நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு வாழும் ஒரு பகுதினராக இருப்பதுடன் ஓரளவு எம் சொந்தங்களுடன் தொடர்பினை பேசும் மக்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் மீதான உண்மையான ஈடுபாடு உண்டா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல முடியும். தமது விடுமுறையை கழிக்கும் ஒரு சொர்க்க பூமியாகவே எம் தேசங்களை நோக்குகின்றார்கள். இவர்களை பொறுத்தவரை ஓரளவு வசதிகள் நிறைந்த வாழ்க்கையே வாழ்கின்றனர்.
1990 இல் இருந்து 2010 ஆண்டுவரை புலம்பெயர்ந்த மக்களின் மனதில் ஆறாத வலிகள் எம் உறவுகள் பற்றிய சிந்தனைகள் ஆழமாக புதைந்து இருந்தாலும் அவர்களால் அவர்கள் நினைக்கும் அளவிற்கு எம் உறவுகளுக்கு வேண்டிய உதவிகளை செய்ய முடியாதவர்களாகவே வாழ்கின்றனர். புலம்பெயர் நாட்டு வாழ்விற்கும் வாழ்க்கை செலவிற்கும் கணவன் மனைவி இருவருமே வேலைகளுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையிலேயே வாழ்கின்றனர். தவிர இவர்கள் மிகவும் ஒரு நெருங்கிய தொடர்பினை தமது உறவுகளுடன் பேணி காப்பதால் இங்குள்ள செலவுகளை சமாளித்தபடி ஊருக்கும் பணத்தை அனுப்பவேண்டிய நிர்பந்த கைதிகளாகவே வாழ்கின்றனர்.ஊரில் வாழும் உறவுகளின் மனநிலையோ வெளிநாட்டில் பணம் கொட்டி கிடக்கின்றது என்பதேயாகும்.
பொருளாதார ரீதியாக நோக்குவோமானால் ஒவ்வொரு நாட்டின் தலா வருமானமும் அந்த நாட்டு வாழ்கை செலவீனமும் மிகவும் நெருங்கிய தொடர்புகளை கொண்டதாகவே அமையும்.ஆகவே நாம் வெளிநாடுகளில் உழைக்கும் எமது தலா வருமானமும் எம் வாழ்க்கை செலவீனமும் கிட்டதட்ட ஒரே அளவானதாகவே இருக்கும்.ஊரில் உள்ள எம் உறவுகளுக்கு நாம் உதவி செய்ய விரும்பினால் நாம் எம் அடிப்படை தேவைகளை தியாகம் செய்தே அனுப்புகின்றோம் என்பதனை ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் வாழும் பலர் உணர்வதே இல்லை. வெளிநாட்டு பணத்தின் பெறுமதி எம் நாட்டில் நாணய மாற்றம் அடையும் போது அதிகமாக இருப்பதால் இவர்கள் இதனை புரிந்துள்ள முடியாதவர்களாகவே வாழ்கின்றனர்.
2010 ஆண்டிற்கு பின்னர் புலம்பெயர் நாட்டிற்கு வந்த அநேகருக்கு புலம்பெயர் நாடுகளில் வாழ்வதற்கான அனுமதி பத்திரங்கள் இல்லாதபடியால் அநேகர் சட்டபடி வேலை செல்ல முடியாதவர்களாகவே வாழ்கின்றனர். குறிப்பாக பாரிஸ் பிரித்தானியா
ஜெர்மனி சுவிஸ் ஆகிய நாடுகளில் வாழும் எம் இனத்தவர்கள் சட்டபடி வேலை செய்யாது திருட்டுத்தனமாக ஆசிய நாட்டவரின் வேலையகங்களில் வேலை செய்வதனால் குறைந்த ஊதியத்தில் அதிகளவு வேலைகள் வாங்கப்படும் ஒரு இயந்திரங்களாகவே வாழ்கின்றனர். இவர்களின் வெளிநாடு வாழ்க்கை முறையே மிகவும் பின்தங்கியதாக சேரி வாழ்க்கைக்கு ஒப்பானதாகவே உள்ளது. இது தவிர வேறு சிலருக்கு சந்தர்ப்ப வசத்தால் இங்கு வாழ்வதற்கான அனுமதி பத்திரம் கிடைத்த போதும் தெரு பொறுக்கிகளாகவும் மிகவும் கீழ்த்தரமான சிந்தனை மிக்கவர்களாகவும் வாழ்கின்றனர்.
ஆகவே வெளிநாடு வெளிநாடு என்று கனவு வாழ்கையில் மிதக்கும் பலரும் சிந்திக்கவேண்டியது ஒன்றே ஒன்று தான். எம் நாட்டில் இருந்து சாதிக்க முடியாத எதையும் நீங்கள் இங்கே வந்து சாதிக்க போவதில்லை. முயற்சி எடுங்கள் முன்னேறுங்கள். வெளிநாட்டில் உங்கள் உடல் களைத்து ஒரு நேர உணவுக்காக நீங்கள் வருந்தும் போது ஒரு நேர உணவு போட்டு உபசரிக்க யாருமற்ற ஒரு நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக பிரித்தானியாவில் (லண்டனில்) மதிய, இரவு உணவுகளை கோவிலில் போய் சாப்பிடும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உண்டு. அதாவது மிகுந்த கல்வி கற்றவர்கள் தமது மேற்படிப்பை தொடர லண்டனுக்கு வருகின்றார்கள். அவர்களது வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை இங்கே ஈட்டமுடியாத நிலை காணப்படுவதால் அவர்கள் தமது உணவை கோவில்களில் சென்று பெற்று உண்கின்றார்கள்...ஆகவே மதிப்பான உறவுகளே வெளிநாட்டு கனவை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு எம் தேசத்தில் நிறைவாக இருப்பதை கொண்டு வாழுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
என்றும் பாசத்துடன்
காவியா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக