செவ்வாய், 17 செப்டம்பர், 2019

பெண்களும் படைப்புலகமும்

இன்றைய சூழலில் படைப்புலகத்தில் பெண்களின் பங்களிப்பு என்ன என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பெண்கள் பலர் தனித்துவமான திறமைகளையும் ஆளுமைகளையும் கொண்டிருந்தாலும் கால சுழற்சியின் வேகத்துக்கு ஏற்ப அவர்களால் ஈடுகொடுத்து ஓட முடியாது உள்ளது.பெண்கள் மீதான திணிப்புக்களும் அடக்குமுறைகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்து மூளைசலவை செய்யப்பட்டு பெண்களின் ஒழுக்கங்களும் பண்புகளும் திட்டமிட்டே மழுங்கடிக்கப்படுகின்றது. படைப்புலக பெண்கள் ஆண்களின் சிந்தனையையை வழிமொழியும் அல்லது அவர்களின் விருப்புக்கு இசைவாக நடைபயிலும் குழந்தைகளாகவே வாழ்கின்றனர்.
பெண்கள் மீதான சமூகத்தின் பார்வையும் பெண்களின் பார்வையுமே மிகவும் மாறுபட்டு நாகரீக சூழலின் வழிதோன்றல்கள் என்ற போர்வையில் எம் கலாச்சார விழுமியங்களை குழி தோண்டி புதைக்கும் வேலையை அனேக பெண்களே செய்கின்றனர்.


தமக்கென்று ஒரு சூழலை உருவாக்கி பெண்கள் என்றும் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்று உருவாக்கபட்ட கட்டமைப்பு பெண்களின் நிலையோ மிக மோசமாக பாதிக்கப்பட்டு துன்பத்தின் வழி நிலையை தொட்டு நிற்கின்றது. பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தபடும் ஒரு எச்சைகளாகவே பல பெண்கள் வாழ்கின்றனர்.


ஈழத்தின் இன்றைய நிலையை தமக்கு சாதகமாகவும் அதில் குளிர்காயவும் பல புலம்பெயர் அமைப்புக்களும் தனிமனிதரும் முண்டி அடிக்கின்றனர்.உதவிக்கரங்கள் என்ற போர்வையில் சில ஆயிரங்களை வழங்கிவிட்டு பெண்களின் வறுமை நிலையையும் அவர்களின் துன்பியல் நினைவுகளையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தவும் திட்டமிட்டே ஆசை வார்த்தைகளை பேசி பெண்களின் மனதில் நஞ்சை விதைத்து ஒரு கீழ்மட்டமான கலாச்சார நெருக்கடிக்குள் தள்ளி விடுகின்றனர். படித்த பெண்கள் படிக்காத பெண்கள் என்ற கோட்டினை விடுத்து துன்ப சிலுவையை சுமக்கும் பெண்கள் இப்படியான வலைகளுக்குள் சிக்கி விடுகின்றனர்.


ஆகவே மதிப்புக்குரிய பெண்களே இயன்றளவு உங்களுக்கு தெரியாத ஆண்களின் எந்த ஒரு உதவியையும் பெற்றுக் கொள்ளாதீர்கள்.இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்படும் சில ஆயிரங்களின் பின்னால் விலைமதிப்பில்லா உங்கள் மானம் விலைபேசப்படுகின்றது என்பதனை மறவாதீர்கள்.
படைப்புலக பெண்கள் துணிந்து பெண்களுக்கு ஆதரவாகவும் சுயசிந்தனையின் அடிப்படையிலும் ஆக்கங்களை உருவாக்க வேண்டும். நலிந்த பெண்களுக்கு மனதில் புத்துணர்ச்சியை உருவாக்கும் நம்பிக்கையை வளர்க்கும் ஆக்கங்களை பதிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.தவிர யாரிடமும் எந்த நிலையிலும் பெண்களே நீங்கள் கையேந்தாதீர்கள். நாம் எவரிடமும் உதவிகள் பெற்றுக்கொள்ளும் போது எமது கரங்கள் ஒரு நிலையில் தாழ்ந்தே போகின்றது. இந்த தாழ்ந்து செல்லும் நிலையானது எதிர்காலத்தில் எமக்கு பெரும் துன்பத்தை தரும் அல்லது உருவாக்கும் ஒரு சிறு புள்ளி என்பதனை மனதில் நிறுத்தி இனிவரும் காலங்களில் எவரிடமும் தாழ்ந்து செல்லாத அதே சமயம் எமது மானத்திற்கும் ஒழுக்கத்திற்கும் குந்தகம் ஏற்படாமல் நடைபயில்வோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்...


எழுத்தாக்கம் காவியா

14/09/2015

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக